Sunday, July 8, 2007

துத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்

எட்டயபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும்.
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.

வரலாறு

எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.

பாரதியின் பிறப்பிடம்

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும்தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார்.

எட்டப்பன் அரண்மனை

எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் எட்டப்பன் என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர், பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.

ஊராண்மை

எட்டயபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து ஆகும். தமிழ் நாடு சட்டப் பேரவையில் கோவில்பட்டி தொகுதிக்குட்பட்டது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். எட்டயபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எட்டயபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மக்கள் தொழில்

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வேளாண்மையும் செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர்.

நெசவுத் தொழில்

கைத்தறி நெசவுஇங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது National Institute of Fashion Technology நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் துளையிடப்பட்ட அட்டைகளின் (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

தீப்பெட்டித் தொழில்

நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். தானியங்கி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை

எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்தொடர்ச்சியான வறட்சி
மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம்.

சுற்றுலா

வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு இரயில் மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். மதுரை (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் திருநெல்வேலி (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது.

இவ்வூரில் காணத்தக்க இடங்கள்

1. பாரதி நினைவு மணி மண்டபம்
2. பாரதி பிறந்த வீடு
3. முத்துசாமி தீட்சிதர் நினைவிடம்
4. உமறுப் புலவர் தர்கா
5. எட்டப்பன் அரண்மனை

அருகாமையிலுள்ள சுற்றுலா இடங்கள்

1. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
2. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
3. சங்கரன் கோவில்
4. குற்றாலம் நீர்வீழ்ச்சிகள்
5. திருச்செந்தூர் முருகன் கோவில்
குற்றாலம்

அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகம் தவிர உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும். இயற்கை வளமிக்க தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்றவை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும். இதில் குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. தென்மேற்கு பருவமழை மும்பையில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலையில் பொழிகிறது. குற்றாலம் என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது மனதை கொள்ளை கொள்ளும் வெள்ளை அருவிகளும், இலவசமாய் வித்தை காட்டும் மந்திக் கூட்டங்களும், மலைமுகடுகளை தொட்டு செல்லும் வெண்பஞ்சு மேகங்களும்தான். குற்றாலம் மலையிலிருந்து கிளம்பிப் புறப்படும் பூங்காற்று உடலுக்கு இதம் அளிப்பதோடு, நோயாளிகள் குணம் பெறவும் உதவுகிறது. இந்த அருவி நீரில் குளிக்கும்போது ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி சுறுசுறுப்பையும் பூரிப்பையும் அளிக்கிறது. எந்த அருவிநீரும் இத்தகைய நன்மைகளை அளிப்பதில்லை என 1811ல் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆராய்ச்சி மூலம் தெரிவித்துள்ளனர். தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகொடிகள் உள்ளன. இந்த மூலிகை செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது.
இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் களை கட்டத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேனீக்கள் அதிகமாக உள்ளன. இங்கு செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது. இதற்கடுத்து பேரருவி உள்ளது. இது ஆரம்ப காலத்தில் மிகவும் ஆபத்தான அருவியாக இருந்திருக்கிறது. இங்கிருந்து அரை கி.மீ தொலைவில் சிற்றருவி உள்ளது. ஐந்தருவி 40 அடி உயரத்திலிருந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இங்கு முருகன், சாஸ்தா கோவில்கள் உள்ளன. இன்னும் பழத்தோட்ட அருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி என பல அருவிகள் உள்ளன. குற்றாலத்திலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 பேர், 4 பேர் செல்லும் படகுகள் என தனித்தனியாக உள்ளன. இங்கு சிறுவர் நீந்தி விளையாட நீச்சல்குளமும், மீன்கள் காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்பொருள் ஆய்வகமும் உள்ளது. குற்றாலத்திற்கு வருபவர்களுக்கு மற்றொரு சிறப்பம்சமாக விளங்குவது உடல் உபாதை போக்கும் பலவகையான மஸாஜ்கள். மசாஜும், மத மதவென கொட்டும் தண்ணீரில் குளித்துத் திளைப்பதும், மறக்க முடியாத பேரனுபவம். நினைத்தாலே முக்தி தரும் காசி விஸ்வநாதர் போல் திருகுற்றாலநாதரும் பிரசித்தி பெற்றவர். தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் இது சித்திர சபையாகும். இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனி அகத்தியர் வழிப்பட்ட சிவபெருமான் சன்னதி உள்ளது. அருவிகளில் விளையாடவும், ஆண்டவனிடம் சென்று அவனது அருள் பெறவும் குற்றாலம் ஒரு சிறந்த தலம்.
எப்படிச் செல்வது

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை என தமிழகத்தின் முக்கிய ஊர்களிலிருந்து தென்காசிக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவில்தான் குற்றாலம் உள்ளது. பேருந்துகள் தவிர வேன் சர்வீஸ்களும் ஏராளம். குற்றாலத்திலேயே தங்கும் வசதியும் சிறப்பாக உள்ளது. அல்லது தென்காசியிலேயே கூட தங்கியிருந்து குற்றாலத்திற்கு சென்று வரலாம்.
திருநெல்வேலி வரலாறு

தமிழ்நாட்டில் உள்ள 6 மாநகராட்சிகளில் நெல்லை மாநகராட்சியும் ஒன்று. 1790 ல் உருவாக்கப்பட்ட இந்த நகரம் சுமார் 6,816 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடையது. கேரள மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள இந்த மாநகரம் விவசாயத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரைச் சுற்றி நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததால் திருநெல்வேலி என்ற பெயர் அமைந்தது.சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில்தான் தென் தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை நகர் அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் மிகவும் பெயர் பெற்ற இடம் பாளையங்கோட்டை.வரலாற்றுச் சிறப்பு மிக்க நெல்லை என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் ஏன் பிற மாநில மக்களுக்குக் கூட நினைவுக்கு வருவது நெய் மணக்கும் அல்வா தான். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இங்கு கிடைக்கும் சுவைமிக்க அல்வாவை உற்சாகத்துடன் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை. அல்வாவுக்குப் பெயர் போன இந்த நெல்லையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

பொதுத் தகவல்கள்:பரப்பளவு 87.64 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை சுமார் 4 லட்சம்
வெப்பநிலை கோடை காலத்தில் சராசரி அதிகபட்சம் 34.8டிகிரி சென்டிகிரேட்
குளிர்காலத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 21.6டிகிரி சென்டிகிரேட் மொழிகள் தமிழ், ஆங்கிலம், உருது, தெலுங்கு, மற்றும் செளராஷ்டிரா எஸ்.டி.டி.கோட் எண் 0462

முக்கிய இடங்கள்

தாமிரபரணி ஆறு:நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நெல்லையில் பாயும் இந்தத் தாமிரபரணி ஆறு சுற்றியுள்ள பல பகுதிகளையும் செழிக்க வைக்கிறது.

காந்திமதி நெல்லையப்பர் கோவில்:நெல்லையின் இதயப்பகுதியில் அமைந்துள்ளதுதான் காந்திமதி நெல்லையப்பர் கோவில். விழாக் காலங்களில் குறிப்பாய், தசராவின்போது இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

அறிவியல் மையம்:நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையை அடுத்து அமைந்துள்ளது அறிவியல் மையம். இங்கு கருத்தரங்கம், பள்ளி, கல்லூரி மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனைச் சுற்றி பூங்காவும் அமைந்துள்ளது.

பாபநாசம்:நெல்லையிலிருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாபநாசம். பாபநாசம் மலையில் உள்ளது புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி. திருவிழாக் காலங்களில் தங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டால் அதற்கு ஈடுகட்டும் வகையில் இங்குள்ள கோவிலில், காணிக்கைகள் செலுத்தும் பக்தர்கள் ஏராளம்.கழுகுமலை:கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,300 அடி உயர¬ள்ள இந்தக் கழுகு மலை சுற்றுலா பயணிகளின் சுக வாசஸ்தலம். இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை வேண்டிக் கொண்டால் நனைத்த காரியம் நடக்கும் என்னும் கருத்து இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

தென்காசி:நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரனாசி) என்று அழைக்கப்படும் இந் நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது. அழகு மிகுந்த சிற்பங்கள் பல, இங்குள்ள கோவில்களில் அமைந்துள்ளன.

ஸ்ரீவைகுண்டம்:இங்கு விஷ்ணுவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வைகுண்டபதி சாமி கோவில். இங்கு யானைக்கால் மண்டபம், தமிழ்நாட்டின் மிகப்பிரசித்தி பெற்ற பண்டிகையான வைகுண்ட ஏகாதசியன்று மக்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தும் மண்டபம் ஆகியவை இக் கோவிலில் உள்ளன.

மணப்பாடு:1581 ல் கட்டப்பட்ட ஹோலி கிராஸ் தேவாலயம் இந்த ஊரில்தான் உள்ளது. கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாக விளங்கும் இந்த தேவாலயத்தில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புதுவருடம் போன்ற விழாக்கள் சிறப்பு ஜெபங்களுடன் கொண்டாடப்படும்.

கிருஷ்ணாபுரம்:நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

குலசேகரப்பட்டினம்:இது தென்மாவட்டங்களில் தசரா பண்டிகைக்கு பெயர் பெற்ற இடம்.

குற்றாலம்:நெல்லையிலிருந்து சுமார் இரண்டுமணி நேர பஸ் பயணத்தில் குற்றாலத்தை அடைந்து விடலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீஸன் உள்ள குற்றாலத்தில் உள்ளூர் மக்களை விட நாள்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இங்குள்ள தேனருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி போன்ற அருவிகள் மிகவும் பிரபலம் வாய்ந்தவை. இங்கு விழும் அருவிகளில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இங்கு திரைப்படக் கலைஞர்கள் , மற்றும் வெளிநாட்டினர் உள்பட பொதுமக்கள் பலர் வருடத்திற்கு ஒரு முறையாவது இங்கு வராமல் இருப்பதில்லை. இங்குள்ள குளிர்ச்சியான சீதோஷ்ணநலை, ரம்மியமான சுற்றுப்புறச்சூழல் அனைத்து மக்களையும் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

குற்றாலத்தில் உள்ள கோவில்:இங்குள்ள குற்றாலநாதர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தக் கோவிலில் உள்ள கற்தூண்களில் பொறிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் மூலம் நாம் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

திருச்செந்தூர்:அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சங்கரன்கோவில்:இங்குள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

குலசேகரப்பட்டினம்:திருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பண்டிகையில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் இங்கு கூடி இப்பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

தூத்துக்குடி:நெல்லையிலிருந்து மிக அருகிலுள்ள தூத்துக்குடி மிகச்சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். இங்குதான் பிரபல ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ளது. முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்ற இடமான தூத்துக்குடியிலிருந்து அண்டை நாடான இலங்கைக்கு படகிலேயே சில மணிநேரங்களில் சென்றுவிடலாம். தூத்துக்குடி உப்புஉற்பத்தி மற்றும் மீன்வளத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.

பத்தமடை:நெல்லையை ஒட்டியுள்ள பத்தமடை பாய் நெய்வதற்குப் பெயர் போன இடமாகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எட்டையாபுரம்:புரட்சிக்கவிஞர் பாரதியாரின் பிறந்த இடமான எட்டையாபுரம் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இதே ஊரில்தான் இஸ்லாமியக் கவிஞர் உமறுப்புலவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டப்பிடாரம்:விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் இங்குதான் பிறந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.

பாஞ்சாலங்குறிச்சி:17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஊரில் இருந்துகொண்டுதான் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த இடம் இன்றும் மிகச்சிறந்த வரலாற்றுச் சிறப்பிடமாக போற்றப்படுகிறது.

கட்டபொம்மன்கோட்டை:1974 ல் தமிழக அரசால் கட்டப்பட்டது தான் கட்டபொம்மன்கோட்டை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதைச் சுற்றிப்பார்ப்பதன் மூலம் இதன் வரலாற்று முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம்.