Sunday, July 8, 2007

திருநெல்வேலி வரலாறு

தமிழ்நாட்டில் உள்ள 6 மாநகராட்சிகளில் நெல்லை மாநகராட்சியும் ஒன்று. 1790 ல் உருவாக்கப்பட்ட இந்த நகரம் சுமார் 6,816 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடையது. கேரள மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள இந்த மாநகரம் விவசாயத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரைச் சுற்றி நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததால் திருநெல்வேலி என்ற பெயர் அமைந்தது.சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில்தான் தென் தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை நகர் அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் மிகவும் பெயர் பெற்ற இடம் பாளையங்கோட்டை.வரலாற்றுச் சிறப்பு மிக்க நெல்லை என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் ஏன் பிற மாநில மக்களுக்குக் கூட நினைவுக்கு வருவது நெய் மணக்கும் அல்வா தான். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இங்கு கிடைக்கும் சுவைமிக்க அல்வாவை உற்சாகத்துடன் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை. அல்வாவுக்குப் பெயர் போன இந்த நெல்லையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

பொதுத் தகவல்கள்:பரப்பளவு 87.64 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை சுமார் 4 லட்சம்
வெப்பநிலை கோடை காலத்தில் சராசரி அதிகபட்சம் 34.8டிகிரி சென்டிகிரேட்
குளிர்காலத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 21.6டிகிரி சென்டிகிரேட் மொழிகள் தமிழ், ஆங்கிலம், உருது, தெலுங்கு, மற்றும் செளராஷ்டிரா எஸ்.டி.டி.கோட் எண் 0462

முக்கிய இடங்கள்

தாமிரபரணி ஆறு:நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நெல்லையில் பாயும் இந்தத் தாமிரபரணி ஆறு சுற்றியுள்ள பல பகுதிகளையும் செழிக்க வைக்கிறது.

காந்திமதி நெல்லையப்பர் கோவில்:நெல்லையின் இதயப்பகுதியில் அமைந்துள்ளதுதான் காந்திமதி நெல்லையப்பர் கோவில். விழாக் காலங்களில் குறிப்பாய், தசராவின்போது இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

அறிவியல் மையம்:நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையை அடுத்து அமைந்துள்ளது அறிவியல் மையம். இங்கு கருத்தரங்கம், பள்ளி, கல்லூரி மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனைச் சுற்றி பூங்காவும் அமைந்துள்ளது.

பாபநாசம்:நெல்லையிலிருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாபநாசம். பாபநாசம் மலையில் உள்ளது புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி. திருவிழாக் காலங்களில் தங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டால் அதற்கு ஈடுகட்டும் வகையில் இங்குள்ள கோவிலில், காணிக்கைகள் செலுத்தும் பக்தர்கள் ஏராளம்.கழுகுமலை:கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,300 அடி உயர¬ள்ள இந்தக் கழுகு மலை சுற்றுலா பயணிகளின் சுக வாசஸ்தலம். இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை வேண்டிக் கொண்டால் நனைத்த காரியம் நடக்கும் என்னும் கருத்து இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

தென்காசி:நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரனாசி) என்று அழைக்கப்படும் இந் நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது. அழகு மிகுந்த சிற்பங்கள் பல, இங்குள்ள கோவில்களில் அமைந்துள்ளன.

ஸ்ரீவைகுண்டம்:இங்கு விஷ்ணுவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வைகுண்டபதி சாமி கோவில். இங்கு யானைக்கால் மண்டபம், தமிழ்நாட்டின் மிகப்பிரசித்தி பெற்ற பண்டிகையான வைகுண்ட ஏகாதசியன்று மக்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தும் மண்டபம் ஆகியவை இக் கோவிலில் உள்ளன.

மணப்பாடு:1581 ல் கட்டப்பட்ட ஹோலி கிராஸ் தேவாலயம் இந்த ஊரில்தான் உள்ளது. கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாக விளங்கும் இந்த தேவாலயத்தில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புதுவருடம் போன்ற விழாக்கள் சிறப்பு ஜெபங்களுடன் கொண்டாடப்படும்.

கிருஷ்ணாபுரம்:நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

குலசேகரப்பட்டினம்:இது தென்மாவட்டங்களில் தசரா பண்டிகைக்கு பெயர் பெற்ற இடம்.

குற்றாலம்:நெல்லையிலிருந்து சுமார் இரண்டுமணி நேர பஸ் பயணத்தில் குற்றாலத்தை அடைந்து விடலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீஸன் உள்ள குற்றாலத்தில் உள்ளூர் மக்களை விட நாள்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இங்குள்ள தேனருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி போன்ற அருவிகள் மிகவும் பிரபலம் வாய்ந்தவை. இங்கு விழும் அருவிகளில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இங்கு திரைப்படக் கலைஞர்கள் , மற்றும் வெளிநாட்டினர் உள்பட பொதுமக்கள் பலர் வருடத்திற்கு ஒரு முறையாவது இங்கு வராமல் இருப்பதில்லை. இங்குள்ள குளிர்ச்சியான சீதோஷ்ணநலை, ரம்மியமான சுற்றுப்புறச்சூழல் அனைத்து மக்களையும் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

குற்றாலத்தில் உள்ள கோவில்:இங்குள்ள குற்றாலநாதர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தக் கோவிலில் உள்ள கற்தூண்களில் பொறிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் மூலம் நாம் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

திருச்செந்தூர்:அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சங்கரன்கோவில்:இங்குள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

குலசேகரப்பட்டினம்:திருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பண்டிகையில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் இங்கு கூடி இப்பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

தூத்துக்குடி:நெல்லையிலிருந்து மிக அருகிலுள்ள தூத்துக்குடி மிகச்சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். இங்குதான் பிரபல ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ளது. முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்ற இடமான தூத்துக்குடியிலிருந்து அண்டை நாடான இலங்கைக்கு படகிலேயே சில மணிநேரங்களில் சென்றுவிடலாம். தூத்துக்குடி உப்புஉற்பத்தி மற்றும் மீன்வளத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.

பத்தமடை:நெல்லையை ஒட்டியுள்ள பத்தமடை பாய் நெய்வதற்குப் பெயர் போன இடமாகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எட்டையாபுரம்:புரட்சிக்கவிஞர் பாரதியாரின் பிறந்த இடமான எட்டையாபுரம் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இதே ஊரில்தான் இஸ்லாமியக் கவிஞர் உமறுப்புலவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டப்பிடாரம்:விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் இங்குதான் பிறந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.

பாஞ்சாலங்குறிச்சி:17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஊரில் இருந்துகொண்டுதான் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த இடம் இன்றும் மிகச்சிறந்த வரலாற்றுச் சிறப்பிடமாக போற்றப்படுகிறது.

கட்டபொம்மன்கோட்டை:1974 ல் தமிழக அரசால் கட்டப்பட்டது தான் கட்டபொம்மன்கோட்டை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதைச் சுற்றிப்பார்ப்பதன் மூலம் இதன் வரலாற்று முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

No comments: