Sunday, July 8, 2007

குற்றாலம்

அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகம் தவிர உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும். இயற்கை வளமிக்க தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்றவை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும். இதில் குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. தென்மேற்கு பருவமழை மும்பையில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலையில் பொழிகிறது. குற்றாலம் என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது மனதை கொள்ளை கொள்ளும் வெள்ளை அருவிகளும், இலவசமாய் வித்தை காட்டும் மந்திக் கூட்டங்களும், மலைமுகடுகளை தொட்டு செல்லும் வெண்பஞ்சு மேகங்களும்தான். குற்றாலம் மலையிலிருந்து கிளம்பிப் புறப்படும் பூங்காற்று உடலுக்கு இதம் அளிப்பதோடு, நோயாளிகள் குணம் பெறவும் உதவுகிறது. இந்த அருவி நீரில் குளிக்கும்போது ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி சுறுசுறுப்பையும் பூரிப்பையும் அளிக்கிறது. எந்த அருவிநீரும் இத்தகைய நன்மைகளை அளிப்பதில்லை என 1811ல் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆராய்ச்சி மூலம் தெரிவித்துள்ளனர். தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகொடிகள் உள்ளன. இந்த மூலிகை செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது.
இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் களை கட்டத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேனீக்கள் அதிகமாக உள்ளன. இங்கு செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது. இதற்கடுத்து பேரருவி உள்ளது. இது ஆரம்ப காலத்தில் மிகவும் ஆபத்தான அருவியாக இருந்திருக்கிறது. இங்கிருந்து அரை கி.மீ தொலைவில் சிற்றருவி உள்ளது. ஐந்தருவி 40 அடி உயரத்திலிருந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இங்கு முருகன், சாஸ்தா கோவில்கள் உள்ளன. இன்னும் பழத்தோட்ட அருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி என பல அருவிகள் உள்ளன. குற்றாலத்திலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 பேர், 4 பேர் செல்லும் படகுகள் என தனித்தனியாக உள்ளன. இங்கு சிறுவர் நீந்தி விளையாட நீச்சல்குளமும், மீன்கள் காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்பொருள் ஆய்வகமும் உள்ளது. குற்றாலத்திற்கு வருபவர்களுக்கு மற்றொரு சிறப்பம்சமாக விளங்குவது உடல் உபாதை போக்கும் பலவகையான மஸாஜ்கள். மசாஜும், மத மதவென கொட்டும் தண்ணீரில் குளித்துத் திளைப்பதும், மறக்க முடியாத பேரனுபவம். நினைத்தாலே முக்தி தரும் காசி விஸ்வநாதர் போல் திருகுற்றாலநாதரும் பிரசித்தி பெற்றவர். தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் இது சித்திர சபையாகும். இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனி அகத்தியர் வழிப்பட்ட சிவபெருமான் சன்னதி உள்ளது. அருவிகளில் விளையாடவும், ஆண்டவனிடம் சென்று அவனது அருள் பெறவும் குற்றாலம் ஒரு சிறந்த தலம்.
எப்படிச் செல்வது

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை என தமிழகத்தின் முக்கிய ஊர்களிலிருந்து தென்காசிக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவில்தான் குற்றாலம் உள்ளது. பேருந்துகள் தவிர வேன் சர்வீஸ்களும் ஏராளம். குற்றாலத்திலேயே தங்கும் வசதியும் சிறப்பாக உள்ளது. அல்லது தென்காசியிலேயே கூட தங்கியிருந்து குற்றாலத்திற்கு சென்று வரலாம்.

No comments: