Sunday, July 29, 2007

கோவை-தமிழகத்தின் டெட்ராய்ட்

கொங்கு மண்டலம், கோவை, கோனியம்மன்புத்தூர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுவது தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர்.
தமிழகத்தின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் அளவுக்கு ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை, தமிழகத்தின் தொழில் நகரம்.மாவட்டம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் விரவிக் கிடக்கின்றன. ஜவுளித் தொழில், பொறியியல் தொழில், ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள் என பல வகையான தொழில்கள் இங்கு ஆட்சி புரிகின்றன.
இதமான தட்பவெப்பம், விருந்தோம்பலில் வெளுத்துக் கட்டும் இனிய மக்கள் என ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகளுடன் உள்ள கோவை, இப்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு பச்சைக் கம்பளம் விரித்து விண்ணதிர வளர காத்திருக்கிறது.
வரலாறு:
நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் அழகிய நகரம் கோவை. மதுரைக்கு எப்படி மீனாட்சியோ அதுபோல, கோவைக்கு கோணியம்மமன். அதனால்தான் கோணியம்மன் ஆட்சி புரியும் நகரம் என்பதால் கோவை மாநகருக்கு கோணியம்மன்புத்தூர் என்றும் ஒரு பெயர் உண்டு.சேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு. பின்னர் சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது.
கரிகால் சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பின்னர் ராஷ்டிரகூடர்கள் கைக்கும் கொங்கு பூமி மாறியது. மைசூரை ஆண்ட கங்க மன்னர்கள் கையிலும் சில காலம் கோவை தவழ்ந்தது. அதன் பின்னர் சாளுக்கியர்களும், தொடர்ந்து பல்லவர்களும் கோவை மண்டலத்தை ஆட்சி புரிந்துள்ளனர். சில காலம் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் கைக்கும் கோவை இடம் மாறியிருந்தது.
9வது நூற்றாண்டில் மீண்டும் சோழர் கைக்கு கோவை மாறியபோதுதான் கோவை மாநகரத்தை அழகான, திட்டமிட்ட ஒரு நகரமாக மாற்றினார்கள். நகரின் மையத்தில் கோணியம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதைச் சுற்றிலும் நகரம் உருவாக்கப்பட்டது.அந்த ஊருக்கு கோவன்புதூர் என்று பெயரும் சூட்டப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவனின் பெயர் தான் கோவன். அவரது பெயராலேயே அந்த ஊர் நிர்மாணிக்கப்பட்டது. இதுதான் பின்னர் கோயம்புத்தூர் என்று உருமாறியது.கோவையை வளர்த்த பெருமை இருளர் சமுதாயத்திற்கு உண்டு. ஊரைச் சுற்றிலும் அவர்கள் ஏராளமான குளங்களையும், ஏரிகளையும் வெட்டினர். இன்றளவும் அந்த குளங்கள் கோவை மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பது வரலாற்றையும் மீறிய சாதனைப் பதிவு.சோழர்களிடமிருந்து பாண்டியர்கள் கைக்கு மாறிய கோவை, பின்னர் 1291வது ஆண்டில், கர்நாடகத்தின் சாளுக்கிய மன்னர்கள் கைக்கு மாறியது. அதன் பின்னர் 14வது நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட முகம்மதியர்கள் கோவையைக் கைப்பற்றினர். மதுரையை ஆண்டு வந்த முஸ்லீம் மன்னர்தான் கோவையையும் ஆட்சி புரிந்தார்.
14ம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் விஜய நகர சாம்ராஜ்யத்தின் கீழ் கோவை வந்தது. விஜய நகர சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட நாயக்க மன்னர்கள் வசம் கோவை வந்தது.தங்களது கீழ் வந்த பகுதிகளான கோவை, வேலூர், தஞ்சாவூர், சந்திரகிரி, மைசூர் ஆகிய பகுதிகளுக்கு ராணுவ ஆட்சியாளர்களை நாயக்கர்கள் நியமித்தார்கள். இவர்களுக்கு பாளையக்காரர்கள் என்று பெயர்.இந்தக் காலகட்டத்தில் கோவை நகரமாக இருக்கவில்லை. 3000 பேர் மட்டுமே வசித்து சிறிய கிராமமமாகத்தான் இருந்தது.
1760களில் மைசூர் ஆட்சியை ஹைதர் அலி கைப்பற்றினார். அவரது நிர்வாகத்தின் கீழ் கோவை பிராந்தியமும் வந்தது. ஹைதர் அலி இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து கடுமையாக போராடினார்.மைசூர் சமஸ்தானத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே கடும் போர் நடந்தது. திப்பு சுல்தானின் மரணத்தோடு இந்தப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் கோவையை சென்னை மாகாணத்தோடு ஆங்கிலேயர்கள் இணைத்தனர்.1804ம் ஆண்டு கோவையை தலைநகரமாகக் கொண்டு புதிய கோவை மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1848ம் ஆண்டு கோவை நகருக்கு நகராட்சி அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.முதல் நகராட்சித் தலைவராக சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் பதவியேற்றார். இப்படியாக நகரமாக உருவெடுத்த கோவை, மாநகரமாக அதாவது மாநகராட்சியாக 1979ம் ஆண்டு அந்தஸ்து உயரப் பெற்றது. அருகாமையில் இருந்த சிங்காநல்லூர் நகராட்சி அப்போது கோவை நகராட்சியுடன் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டது.
கோவை சுற்றுலா:
சுற்றுலா குறித்த தகவல்களுக்கு அணுக:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.டாக்டர் நஞ்சப்பா சாலை, கோவை - 641 018.தொலைபேசி: 0422- 236311, 236324.
சுற்றுலா தலங்கள்:தாவரவியல் பூங்கா, ஊட்டி.முதுமலை வன விலங்குகள் சரணாலயம்.டாப் ஸ்லிப்.பரம்பிக்குளம் - ஆழியார். ஆணைமலை வன விலங்குகள் சரணாலயம். சிறுவாணி நீர் வீழ்ச்சி. பிளாக் தண்டர், மேட்டுப்பாளையம்.
கோவில்கள்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில் (கோவையிலிருந்து 7 கி.மீ). மருதமலை முருகன் கோவில் (12 கி.மீ). ஈச்சநாரி தண்டுமாரியம்மன் கோவில், விநாயகர் கோவில்.பூண்டி அருள்மிகு கோணியம்மன் கோவில். அவிநாசி சாலை இஸ்கான் கோவில். பொள்ளாச்சி மெயின்ரோடு மகாலட்சுமி கோவில். வெள்ளிங்கிரி மலை அடிவாரம் ஈஷா தியான மையம். தென்திருமலை ஸ்ரீவெங்கடசலாபதி கோவில்.
பிற இடங்கள்:
தாவரவியல் பூங்கா (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகம்). மேட்டுப்பாளையம்: பிளாக் தண்டர் தீம் பூங்கா. வனவியல் கல்லூரி அருங்காட்சியகம். ஜி.டி.நாயுடு தொழில் பூங்கா. டாப் ஸ்லிப், மூணார், ஆசனூர், ஊட்டி, குன்னூர்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ்: அதி வேக இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நரேன் கார்த்திகேயனைக் கொடுத்த ஊர் கோவை. இங்கு கார்ப் பந்தயங்களும் புகழ் பெற்றவை.கார் பந்தயம், மோட்டார் பந்தயம், கோ கார்ட் பந்தயம் ஆகியைவ கரியப்பா மோட்டார் ஸ்பீட்வே என்ற திடலில் நடத்தப்படுகிறது.கிளப்புகள்: காஸ்மோபாலிடன் கிளப், இங்கிலீஷ் கிளப், ஃபிளையிங் கிளப்.
முக்கிய அமைப்புகள்:தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா), கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம் (கொடீஸியா), தென்னிந்திய ஜவுளி ஆய்வு கழகம் (சிட்ரா), தென்னிந்திய சோதனை மற்றும் ஆய்வு மையம் (சிதாரக்).
பிற தகவல்கள்:
தலைநகரம்: கோயம்புத்தூர்.
மக்கள் தொகை: 18,65,234 (2001 கணக்குப்படி).
கல்வியறிவு: 78 % ஆண்கள் - 81 %, பெண்கள் - 74%.
பேசும் மொழிகள்: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, கொங்கனி, துளு, ஆங்கிலம்.
தட்பவெப்பம்: 20 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் (குளிர்காலத்தில்), 27 முதல் 36 டிகிரி செல்ஷியஸ் (கோடைகாலத்தில்).
மழைக்காலம்: மார்ச் முதல் மே வரை (தென் மேற்கு பருவ மழை), அக்டோபர் முதல் நவம்பர் வரை (வட கிழக்குப் பருவ மழை)

No comments: