Sunday, July 29, 2007

சேது சமுத்திரம்



நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இத்திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது என்றும், இத்திட்டம் மீனவர் உட்பட எல்லாருக்கும் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து புறப்படும் கப்பல்கள் இந்தியக் கடல் வழியாக சென்று கிழக்குக் கரைத் துறைமுகங்களைச் சென்றடையும் வகையில் ஆங்கிலேயர்களால் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தயாரிக்கப்பட்டது. 1860 ல் ஆங்கிலேய கமாண்டர் டெய்லர் என்பவரால் "ராமேஸ்வரம் கப்பல் கால்வாய்' திட்டம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுப் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இத்திட்டம், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1955 இல் "சேது சமுத்திரத் திட்டமாக'ப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்னர் இந்திய அரசால் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு ராமேஸ்வரம் கடல் பகுதியில் பல இடங்களில் பல்வேறு கால கட்டங்களில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுத் தற்போது தனுஷ்கோடி முனையில் இறுதி வடிவம் பெற்றுள்ளது.தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடையிலுள்ள ஆழம் இல்லாத கடல் பகுதியில் 23 மணல் திட்டுக்கள் அமைந்துள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் மணல் திட்டுகளுக்கு இடையில் சேது கால்வாய் தோண்டுவதற்கான இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுத் தற்போது மத்திய அரசும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி முதல் மன்னார் வளைகுடா வழியாக ராமேஸ்வரத்தைச் சுற்றிக் கொண்டு பாக்ஜலசந்தி வழியாக வங்களா விரிகுடாக் கடல் வரை 260 கி.மீ. தூரமுள்ள நீர்வழிப் பாதையில் இத்திட்டம் அமையவுள்ளது. இதற்காக ஆதாம் பாலம் (ராமர் பாலம்) துவங்கி பாக் ஜலசந்தி கடலில் 72 கி.மீ., தூரத்திற்குக் கால்வாய் தோண்டப்படவுள்ளது.மணல் திட்டுகளில் தோண்டி எடுக்கப்படும் மணலில் 10 சதவீதமான 8 மில்லியன் கியூபிக் மீட்டர் மணல் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியில் கொட்டப்படும். இதனால் இப்பகுதியின் நிலப்பகுதி உயர்ந்து கடல் அரிப்பில் இருந்து தனுஷ்கோடி பாதுகாக்கப்படும். 300 மீட்டர் அகலத்திலும், 10.7 மீட்டர் ஆழத்திலும் தோண்டவிருக்கும் சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் கோடி செலவிடப்படும்.4 ஆண்டு கால அளவிற்குள் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினால் வருடத்திற்கு ரூ. 87.42 கோடி வருவாய் கிடைக்கும். 254 முதல் 424 கடல் மைல்கள் பயண தூரம் குறைவதால் 21 முதல் 36 மணி நேரம் பயண நேரமும் குறைகிறது. கப்பல்களுக்கு எரிபொருளும் மிச்சமாகிறது. சேது கால்வாய் தோண்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட மார்க்கத்தில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தீவுகளுக்கு இத்திட்டத்தினால் எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என்று தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் அறிக்கை கூறுகிறது.மன்னார் வளைகுடாத் தீவுகளில் இருந்து 20 கி.மீ., தூரத்திற்கு அப்பால் கடல் வழிப் பாதை அமைவதால் இத்திட்டத்தினால் அரிதான கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது. இதனை ஆதாம் பாலப் பகுதிகளைப் பார்வையிட்ட தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக துணை சேர்மன் பாலகிருஷ்ணன் மற்றும் திட்டப் பொறியாளர்கள் சேஷாத்திரி, ராமமூர்த்தி ஆகியோர் கூறினர்.சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகம் தலைசிறந்த வர்த்தகத் துறைமுகமாக மாறும். இத்துடன், இந்தியத் துறைமுகங்களுக்கு இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்தும் எளிதாகி விடும். உள்நாட்டு நீர்வழிப் பாதை அமைவதால் நாட்டிலுள்ள சிறிய, பெரிய துறைமுகங்களில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் துவக்குவதன் மூலம் சுற்றுலாத் தொழில் மேம்படும். கடல் வாணிபம் பெருகும்.கடல் எல்லைப் பிரச்னையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் இருந்து இக்கால்வாய் வழியாக மன்னார் வளைகுடா கடலுக்குச் சென்று இலங்கைக் கடற்படையினரின் தொல்லையின்றி மீன் பிடிக்கலாம்.இலங்கைக்குக் கொடுக்க வேண்டிய அன்னியச் செலாவணி மிச்சமாகும். ரயில் மற்றும் தரை வழி மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். ராமநாதபுரம், ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியிலுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் மங்களூர் நகரங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மின்னணு நிலையம் போன்ற தொழிற்சாலைகள் உருவாகும்.கொடூரமான புயல் தாக்கி கடலுக்குள் புதைந்து போன தனுஷ்கோடி இத்திட்டத்தால் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.1964 &ல் வீசிய கோரப் புயல், ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள தீவான தனுஷ்கோடியை நிர்மூலமாக்கியது. கட்டடங்கள் கடலுக்குள் புதைந்து போக, ஆங்காங்கே திட்டுக்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. கிழக்குக் கடற்கரையின் அழகிய தீவான தனுஷ்கோடி மீண்டும் உயிர் பெறுவதற்கான வாய்ப்பு சேது சமுத்திரத் திட்டத்தால் உருவாகி இருக்கிறது.ரூ. 2,000 கோடி மதிப்பீட்டிலான சேது சமுத்திரத் திட்டத்தில் தனுஷ்கோடியை அடுத்த ஆதம்ஸ் பாலப்பகுதியில் 20 கி.மீ., நீளத்துக்குக் கால்வாய் வெட்டப்படுகிறது. இதில் கிடைக்கும் களிமண்ணை, தனுஷ்கோடியில் கொட்டி 1,882 ஏக்கர் பரப்பளவு நிலம் சோலைவனமாக மாற்றப்படுகிறது.பயிரிடுவதற்கு ஏற்ற வளமான மண்ணைக் கொட்டி மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைப்பதற்கு அனுமதி கேட்டுத் தமிழக அரசின் தலைமைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், ராமநாதபுரம் ஆட்சியர் ஆகியோருக்குக் கடிதம் எழுதி இருக்கிறது இத்திட்டத்தை நிறைவேற்றும் அமைப்பான தூத்துக்குடி துறைமுக சபை. சேது கால்வாய்க்காகத் தோண்டப்படும் மணல், மண், கல் ஆகியவற்றில், ஒரு கோடி கனமீட்டர் அளவு களிமண் தனுஷ்கோடியில் கொட்டப்படும்.ராமேஸ்வரத்தில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள முகுந்தராயர் சத்திரம் வரையிலும் தற்போது நல்ல சாலை வசதி உள்ளது. அங்கிருந்து தனுஷ்கோடி வரை எஞ்சிய 4 கி.மீ., சாலை, மணல் மேடாகக் காட்சியளிக்கிறது. பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வாடகை ஜீப்புகள் மூலமாகச் சென்று வருகின்றனர். இரு கரைகளும் வலுப்படுத்தப்பட்டு இந்தச் சாலை மேம்படுத்தப்படும்.மீனவர் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு புதிய திட்டங்கள் சேதுசமுத்திரத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.இதன்படி, தனுஷ்கோடியில் மீனவர்களுக்கான மீன்பிடித் துறைமுகம் புனரமைக்கப்படுகிறது. அத்துடன் சிறிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் துறைமுகமும், கப்பல்களைப் பழுதுபார்க்கும் கூடமும் ஏற்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களில் மாநில அரசின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.சேதுசமுத்திரத்திட்டத்துக்கான பிரம்மாண்டமான நிர்வாக அலுவலகம் ரூ. 2 கோடி செலவில் தனுஷ்கோடியில் அமைகிறது. ரேடார் கருவிகளின் வசதியோடு கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தானியங்கி வசதி ரூ. 20 கோடியில் ஏற்படுத்தப்படும்.மேலும், மரங்கள், செடிகள், புல் தரைகள், காய்கறிகள் எனப் பசுமையான சுற்றுச் சுழலை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது.மொத்தத்தில் புதிய துறைமுகங்கள், நவீன வசதிகள், நிலவள மேம்பாடு என தனுஷ்கோடியின் வளர்ச்சிக்கு ரூ. 250 கோடி வரை செலவிடப்படும். இது தமிழக அரசுக்கு நேரடியாகக் கிடைக்கிற பரிசு, மேலும் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம் இது என்கிறார் கப்பல் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு. பூம்புகாரைப் போல தனுஷ்கோடியையும் மீட்க வேண்டும் என்பது திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பம் என்கிறார் அவர்.வளப்படுத்தப்படும் 1,882 ஏக்கர் நிலத்தில், அழகான தனுஷ்கோடித் தீவை, சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக, சொர்க்க பூமியாக மாற்ற முடியும். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அப்பகுதியில் பொருளாதார வளம் மேம்படும் வாய்ப்புள்ளது.

No comments: